இந்தியாவுக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

14

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாகு கான் என்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இவனை பல ஆண்டுகளாக ராணுவத்தினர் தேடி வந்த நிலையில், ஊடுருவல் முயற்சியின் போது கொல்லப்பட்டான்.

'ஆபரேஷன் நவ்ஷெரா நார் IV' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் நவ்ஷெரா நாருக்கு அருகே இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சிக்கு உதவி செய்து வந்த முக்கிய நபரும் கொல்லப்பட்டான்.

1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த பாகு கான். இவனை 'மனித ஜிபிஎஸ்' என்றும் பயங்கரவாத அமைப்புகள் அழைத்து வந்தன. நவ்ஷெரா நார் பகுதியில் ஊடுருவல் முயற்சியின் போது, மற்றொரு பயங்கரவாதியுடன் சேர்த்து பாகு கான் சுட்டுக் கொல்லப்பட்டான்.

குரேஸ் செக்டாரில் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு பாகு கான் காரணமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடினமான பகுதிகள் மற்றும் ரகசிய பாதைகளை அறிந்து வைத்ததன் மூலம் இந்த ஊடுருவல் முயற்சியில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகு கான் தேவைப்படுபவனாக இருந்துள்ளான்.

இவன், ஹிஸ்புல் கமாண்டராக இருந்தாலும், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய குரேஸ் மற்றும் அண்டைப் பகுதிகளில் வேறு சில பயங்கரவாதக் அமைப்புகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கும் உதவி செய்து வந்துள்ளான் என்று தெரியவந்துள்ளது.

Advertisement