டிராவிட் விலகியது ஏன் * ராஜஸ்தான் அணியில் இருந்து

புதுடில்லி: ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் விலகினார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 52. பிரிமியர் அரங்கில் 2011ல் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். 2012-13ல் கேப்டன், 2014-15ல் ஆலோசகராக இருந்தார்.
இந்தியாவுக்கு 'டி-20' உலக கோப்பை (2024) வென்று தந்த பயிற்சியாளர் டிராவிட், கடந்த ஆண்டு ராஜஸ்தான் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார். வீரர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
இருப்பினும் 14ல் 4 போட்டியில் மட்டும் வென்று 9வது இடம் பிடித்தது. சமீபத்தில் 2021 முதல் கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சன், தன்னை விடுவிக்குமாறு அணியை கேட்டுள்ளார். இதனிடையே அணியை ஒட்டு மொத்தமாக மாற்றி கட்டமைக்கும் வாய்ப்பை, டிராவிட் வசம் கொடுக்க, நிர்வாகம் முன்வந்தது.
இதை ஏற்க மறுத்த டிராவிட், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதுகுறித்து ராஜஸ்தான் அணி வெளியிட்ட அறிக்கையில்,' டிராவிட் முன்னதாக பதவி விலகுகிறார். அவரது பங்களிப்புக்கு நன்றி,' என தெரிவித்துள்ளது.
காரணம் என்ன
சாம்சன் வெளியேறுவதால், புதிய கேப்டனை தேர்வு செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது ராஜஸ்தான் அணி. கடந்த சீசனில் சாம்சன் காயத்தில் இருந்த போது, ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். இவரை முழு நேர கேப்டனாக நியமிக்க முயற்சிகள் நடக்கின்றன. மறுபக்கம் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல் போட்டியில் உள்ளனர். தனது 'சீடர்' சாம்சன் வெளியேற்றம், டிராவிட்டுக்கு கோபத்தை தந்திருக்கும். புதிய கேப்டன் தொடர்பாக ராஜஸ்தான் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டிராவிட் விலகி இருக்கலாம்.

Advertisement