எளிதாக வெல்லுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் ஜப்பானுடன் பலப்பரீட்சை

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பீஹாரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில் தரவரிசையில் 'டாப்' ஆக உள்ள அணி இந்தியா (நம்பர்-7'), 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. எப்படியும் கோப்பை வென்று, பெல்ஜியம், நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என நம்பப்படுகிறது.
ஆனால், முதல் போட்டியில் 23வது இடத்திலுள்ள சீனாவை 4-3 என போராடி வீழ்த்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், 'ஹாட்ரிக்' கோல் அடித்து இருந்தாலும், எளிதான 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பை, வீணடித்து 'ஷாக்' கொடுத்தார். 11 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில் 4 ல் மட்டுமே கோல் அடித்தனர்.
ஜுக்ராஜ் சிங், சஞ்சய், அமித் ரோஹிதாஸ் இதில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இன்று இந்திய அணி, 18 வது இடத்திலுள்ள ஜப்பானை சந்திக்கிறது. முதல் போட்டியில் கஜகஸ்தானுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செய்த ஜப்பான் அணி, 7 கோல் அடித்து மிரட்டியது. இதனால், இந்திய அணி தங்கள் தவறுகளை சரி செய்து மீண்டு வந்தால் எளிதாக வெற்றி பெற்று, 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறலாம்.

Advertisement