பெங்களூருவில் சுப்மன் கில் * ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக...

பெங்களூரு: ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. செப். 14ல் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இதற்கான இந்திய அணி துணைக் கேப்டனாக, சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். தவிர, துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக களமிறங்க இருந்தார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துலீப் டிராபியில் இருந்து விலகினார். இதில் இருந்து மீண்ட சுப்மன், மொகாலியில் 'ஜிம்' பயிற்சியில் ஈடுபட்டார்.
இதனிடையே தொடர்ச்சியான மழை, போதிய பயிற்சி வசதி இல்லாத நிலையில் சுப்மன், உள்ளிட்ட இந்திய அணியின் பல வீரர்கள், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு முன்னதாக வருகை தந்தனர். இங்கு வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.
தவிர ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட இந்திய அணியினர் பெங்களூருவில் உள்ளனர். வரும் செப். 4ல் இந்திய அணியினர் துபாய் கிளம்பிச் செல்கின்றனர். மறுநாள் முதல் (செப். 5) பயிற்சியை துவக்குகின்றனர்.

இரவு 8:00 மணிக்கு...
ஐக்கிய அரபு எமிரேட்சில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, ஆசிய கோப்பை தொடரின் 18 போட்டிகள் அரைமணி நேரம் தாமதமாக, இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு துவங்கும். எமிரேட்ஸ்-ஓமன் மோதும் ஒரு போட்டி மட்டும் மாலை 5:30க்கு துவங்கும்.

Advertisement