ஆசிய ஹாக்கி: தென் கொரியாவுக்கு 'ஷாக்'

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, மலேசியாவிடம் தோல்வியடைந்தது.
பீஹாரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
நேற்று 'பி' பிரிவு லீக் போட்டிகள் நடந்தன. இத்தொடரில் 5 முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் தென் கொரிய அணி, மலேசியாவை சந்தித்தது. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் தென் கொரியாவின் ஜின் ஜியான் ஒரு கோல் அடித்தார்.
இதன் பின் முதல் பாதி முடிவதற்கு சற்று முன் மலேசியாவின் அனுவார் (29) கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் மலேசியாவின் ஹம்சானி 33வது நிமிடம் ஒரு கோல் அடிக்க, மலேசியா 2-1 என முந்தியது.
மீண்டும் அசத்திய அனுவார், 34, 38 வது நிமிடங்களில் அசத்தி, 'ஹாட்ரிக்' கோல் அடித்து மிரட்டினார். முடிவில் தென் கொரிய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
'சூப்பர்-4' வாய்ப்பு
முதல் போட்டியில் வங்கதேசம், தற்போது தென் கொரியாவை வீழ்த்திய மலேசிய அணி, 6 புள்ளியுடன் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் வங்கதேச அணி 8-3 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.