கால்பந்து: இந்தியா அபாரம் * தஜிகிஸ்தானை வீழ்த்தியது

ஹிசோர்: நேஷன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2-1 என தஜிகிஸ்தானை வீழ்த்தியது.
மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இரு பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும்.
உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 106 இடத்திலுள்ள தஜிகிஸ்தானை அதன் சொந்தமண்ணில் சந்தித்தது.
4வது நிமிடம் தஜிகிஸ்தான் வீரர் அலிகான் தலையால் பந்தை முட்டி வெளியே தள்ள முயன்றார். அங்குவந்த இந்திய வீரர் அன்வர் அலி, தனது தலையால் பந்தை முட்டி கோலாக மாற்றினார். 13வது நிமிடம் இந்திய வீரர் சந்தேஷ் ஜின்கன் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 23வது நிமிடம் தஜிகிஸ்தான் வீரர் சமியவ் கோல் அடித்தார்.
போட்டியின் 72வது நிமிடம் தஜிகிஸ்தான் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் ரஸ்தம் அடித்த பந்தை தனது காலால் தடுத்து அசத்தினார் இந்திய அணி கேப்டன், கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து.
முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த 17 ஆண்டில் முதன் முறையாக தஜிகிஸ்தானை வென்றது. நாளை தனது இரண்டாவது போட்டியில் ஈரானை சந்திக்க உள்ளது.