'கலாசாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர்' கவுதமானந்த மகராஜ் பெருமிதம்

5

தஞ்சாவூர்: தஞ்சாவூர், சிவாஜி நகரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு, அகில உலக தலைவர் சுவாமி கவுதமானந்த மகராஜ், நேற்று விஜயம் செய்தார். அவருக்கு, பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மடத்தில் பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தரின் படங்களுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

சுவாமி கவுதமானந்த மகராஜ் பேசியதாவது:



பரதம், இசை, நாடகம் என பல பாரம்பரிய கலைகள் பிறப்பிடமாகவும், அவதார புருஷர்கள், மகான்கள், ஆன்மிகப் பெரியவர்கள், இசை மேதைகள், விஞ்ஞானிகள் என பலரும் இந்த மண்ணில் பிறந்து பெருமை சேர்த்துள்ளனர். இதனால், தான் கலாச்சாரத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்குகிறது. பெருமைமிக்க தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டு, சேவைப் பணிகளை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.


மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்களுக்கான சேவை பணிகளை இன்னும் அதிகளவில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் செய்து வளர்ச்சி பெறும். பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை உபதேசங்களை பின்பற்றி வாழ்வது அவசியம். சோழ மண்டலத்தில் உள்ள சமூக மேம்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, ராமகிருஷ்ண மடத்தின் சேவைப் பணிகளுக்கு துணை நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.


தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Advertisement