அமைச்சர் மீது மாஜி அமைச்சர் சந்திர பிரியங்கா டார்ச்சர் புகார்; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

15


புதுச்சேரி: முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபிரியங்கா, நேற்று சமூக வலைதளமான முகநுாலில் வெளியிட்டுள்ள உருக்கமான 30 நிமிட வீடியோ, புதுச்சேரியின் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., கூறியுள்ளதாவது: பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி, ஆங்காங்கே ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் எனக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது. அதில், பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக எஸ்.எஸ்.பி., எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கொம்யூன் ஆணையர் மற்றும் அந்த பேனரில் எனது படம் இருந்ததால், நானும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.



விசாரித்ததில், குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் ஒருவர் இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். விசாரித்தில், இதுக்கு பின்னாடி அமைச்சர் இருக்காரு என்று தெரிய வந்தது.நான் அமைச்சராக இருந்தபோதே, ஏராளமான பிரச்னைகளை எல்லாம் பார்த்துவிட்டு தான், இதெல்லாம் வேண்டாம். நம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என ஒதுங்கி வரேன்.



ஆனா, நாம ஒதுங்கனதுக்கு அப்புறமும் ஒரு சுயநலமாக, கன்னிங்கா, தன் கன்ட்ரோலில் வரவில்லை என்பதற்காக, ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் பண்ணுவாங்க என்பதற்கு இது ஒரு உதாரணம். நானும் கொஞ்ச நாளா பார்த்து கொண்டு வருகிறேன். ரொம்ப 'டார்ச்சரா' போயிட்டு இருக்கு. நம்மள 'டார்ச்சர்' கொடுக்கலாம். நாம அரசியல்வாதி. அரசியலுக்கு வரும்போதே எதையும் துணிச்சலாக சந்திக்க வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.


எதையும் சமாளிக்க தெரியும். அதுக்காக நம்முடன் இருப்பவர்கள் பாதிக்கக்கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ பிரச்னைகள் தந்தார்கள். அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம, நாசுக்காக வெளியே வந்துவிட்டோம். இன்னைக்கும் அந்த அமைச்சர்கள் 'டார்ச்சர்' பண்றாங்க. நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒன்று, இரண்டு பேர்தான் அப்படி செய்யறாங்க. இதனால், ஒன்றும் ஆகப்போவது இல்லை. தேவையில்லாத அலைச்சல். அதாவது நம்மல 'டார்ச்சர்' பண்றாங்களாமாம்.


இதுல எனக்கு என்ன வருத்தமென்றால், எதுக்கு ஒரு ஏழை குடும்பத்தை தேவையில்லாம கொண்டு வரீங்க... நாம அரசியலை தாண்டி நார்மலா இருப்பதால் பரவாயில்லை. அவங்க தரப்பை புரிந்து கொள்கிறோம். ஒரு அமைச்சரா இருந்தா எவ்வளவு வேலை இருக்கும். அமைச்சர் என்பது சாதாரணமானது அல்ல. முதலில் எம்.எல்.ஏ., என்பதே சாதாரண விஷயமல்ல. எவ்வளவு கஷ்டங்களை தாண்டி தேர்தலில் ஜெயிக்கிறோம். அதையெல்லாம் ஜெயிச்சதுக்கப்புறம் மக்களை மறந்துட்டு, நம்ம கன்ட்ரோல்ல இல்லன்னா அவங்களை எவ்வளவு டார்ச்சர் வேணும்னாலும் கொடுக்கலாம்.


அவங்க எம்.எல்.ஏ.,வா இருந்தாலும் சரி. யாரா இருந்தாலும் சரி. 'டார்ச்சர்' பண்ணனும். எனக்கு தெரியலை. எம்.எல்.ஏ., ஒரு ஜென்சா இருந்தா பண்ணுவீங்களா... நம்மளா இருப்பதால, நம்பள, நம்ப கூட இருக்கிறவங்கள எல்லாரையும் 'டார்ச்சர்' கொடுக்கறது. தேவையில்லாம வழக்கு போடறது. இதெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்குது. நாகரீகமான அரசியலா இது இல்லை. என்ன பெரிசா ஆயிடப்போவுது. ஒரு 'பர்சனல் அட்வைஸ்'. ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதோ ஒரு நல்லது பண்ணனும். கெட்டது பண்றது ரொம்ப ஈசி. நல்லது பண்றது ரொம்ப கஷ்டம். இனிமேலாவது திருந்தி நல்லது செஞ்சா நல்லாயிருக்கும்.


சம்மன் ஒரு விஷயமே அல்ல. அதை பார்த்துக்க போறோம். ஆனா, நீங்கா இத ஒரு வேலையா எடுத்துக்கிட்டு செய்யறீங்கன்னா நீங்க எவ்வளவு 'பிரியா' இருக்கீங்க. மக்கள பத்தி யோசிக்காம இருக்கீங்க என்பதற்கு இது ஒரு உதாரணம். உங்க தொகுதியில போயி கேட்கும் போதுதான் தெரியுது. அங்கு, ஏராளமான பிரச்னை இருக்குது. அதை சரி செய்ய உங்களுக்கு நேரமில்லை. ஆனால், இதைபத்தியெல்லாம் பேச நேரமிருக்கு.ஏ னா, ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துடக்கூடாது.


அய்யய்யோ... அரசியலே வேண்டாம்பா என்ற சொல்றப்படி அவங்களை அசிங்கப்படுத்தரீங்க. இது ஒரு அரசியல். இந்தமாதரி அரசியல் எல்லாம், எனக்கு என் அப்பா கற்றுத்தரவில்லை. அடுத்தவங்களுக்கு நல்லது செய்யறதை தாண்டி, கெட்டது செஞ்சிடக்கூடாது என சொல்லி வளத்த மனுசனோட பொண்ணு நானு... அதனால், மத்தவங்கள கஷ்டப்படுத்த தோணல..
இப்பகூட இந்த வீடியோ எதுக்குன்னா... நாம எல்லாம் செஞ்சிட்டோம். நாம பண்ணது எல்லாம் யாருக்கும் தெரியாதுன்னு ஒரு எண்ணம் இருக்குமுல்ல உங்களுக்கு. நீங்க பண்றது எல்லாமே தெரியும். இருந்தாலும் ஒரே ஒரு விஷயத்திற்காக உங்க பெயரை சொல்லாம இருக்கேன்.

இது தொடர்பாக ஒரு அதிகாரிகிட்ட புகார் கொடுக்கபோனேன். அவரிடம், எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு நான் கேட்டதும், வேணுமென்றால் ஒன்று செய்யுங்கள். உங்க பெயரில் உள்ள சொத்துகளை மத்தவங்க பெயரில் மாத்திடுங்க.. பாதுகாப்பிற்காக என்கிறார். எந்தளவிற்கு அவர்கள் சொல்லியிருந்தால் அந்த அதிகாரி அப்படி பேசியிருப்பார்.

அப்போது தான் யோசிச்சேன். நமக்கே இப்படி என்றால், சாமானியனின் நிலையை எண்ணிப்பார்த்து, தாக்கு பிடித்து வருகிறேன்.


ஒன்னே ஒன்னுதான். நீங்க என்ன பண்ணினாலும், பெரிசா பாதிக்காது. இதுக்கு மேல இழக்க ஒன்றுமே கிடையாது. எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு..எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் அரசியலுக்கு வந்துள்ளோம். இங்கு ஒன்னே ஒன்னுதான். மக்களுக்கு நல்லது பண்ணனும். பொண்ணா இருந்து சாதிக்கனும். அதைவிட இதுவரை உங்க பெயரை சொல்லாம இருக்கறதுக்கு காரணம் முதல்வர் அய்யா மட்டும் தான். எனது அப்பா ஸ்தானத்தில் இருக்கும் சி.எம்.,ற்காக மட்டும் தான் உங்க பெயரை சொல்லாம இருக்கேன்.


அவருதான், நீ போயி தேர்தல் வேலையை பா ரு. வேற எதையும் காதுல வாங்காத என்றார். ஆனா, திருப்பி திருப்பி தொந்தரவு பண்ணிட்டு இருக்கும்போது 'அட்லீஸ்ட்' நீங்க என்னை 'டிஸ்டப்' பண்றது எனக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியனும்ல, அதுக்காகத்தான்.
தயவு செய்து, என்னை 'டார்ச்சர்' செய்யறது விட்டுவிட்டு, உங்களை ஜெயிக்க வைத்த மக்களுக்கு நல்லது செய்யுங்க. அவங்கதான் நமக்கு முதலாளி. முதலாளிகளுக்கு நாம ஒழுங்கா வேலை பார்த்து கொடுக்கனும்.


அதவிட்டுவிட்டு, என்னிடம் பணம் இருக்கு, நான் யாரை வேண்டும் என்றாலும் மிரட்டுவேன் என்றால், அதுக்கு நான் ஆள் கிடையாது. எனக்கு, உங்ககிட்ட வரணும்ன்ற அவசியமும் கிடையாது. இப்போதைக்கு போய் நான் மக்கள்கிட்ட நிக்கனும். அவ்வளவுதான். அவங்க பார்த்து நமக்கு ஏதாவது செய்யனும். மத்த யாரும் இப்ப அவசியம் கிடையாது. தயவு செய்து திரும்பவும் சொல்கிறேன். ஒரே ஒருவருக்காக மட்டும் தான் உங்க பேரை சொல்லாமல் இருக்கிறேன். என்.ஆர். அய்யாவிற்காக மட்டும் தான் எவ்வளவோ பொறுத்து போய் கொண்டுள்ளேன்.


பாவம், அவரே நிறைய பொறுத்துக் கொண்டுதான் போய் கொண்டிருக்கிறார். இதையெல்லாம், மனசுலு வைத்துக் கொண்டு, அமைச்சர்கள் கொஞ்சம் அமைதியா, இன்னும் 8 மாசம் தான் உள்ளது. தேர்தல் வேலையை பார்த்தா நல்லா இருக்கும் மக்களுக்கு ஏதாவது வேலைய பாருங்க... என்னையும் வேலை பார்க்க விடுங்க. என்னை நம்பி நிறைய பேர் உள்ளனர். தேவையில்லாம அலைய விடாதிங்க. இதுக்கு மேலேயும் இப்படிதான் பண்ணுவீங்கன்னா... பொம்பளைன்னு பாக்காதீங்க. எல்லா தொகுதிகளிலும், பெண்கள் ஓட்டு அதிகம். பெண்களுக்கு நல்லாவே தெரியும்.


நான் யாரை சொல்றேன் என்று கண்டுபிடித்திருப்பார்கள். அது அவ்வளவா நல்லா இருக்காது. அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. நீங்களும் வாழுங்க... என்னையும் வாழ விடுங்க... நன்றி என குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த சந்திரபிரியங்காவின் இந்த பரபரப்பு வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

Advertisement