சேறும், சகதியுமான வழித்தடம் பொதுமக்கள் கடும் அவதி

பாப்பாரப்பட்டி, பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, 3வது வார்டுக்கு உட்பட்ட சின்னான்திட்டு பகுதியில், 25 குடும்பத்தை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் பிரதான வழியாக, பாப்பாரப்பட்டி முதல் வேப்பனஹள்ளி பஞ்.,க்கு செல்லும் சாலையிலிருந்து பாப்பாரப்பட்டி வாரச்சந்தைக்கு செல்லும் மேய்ச்சல் புறம்போக்கு வழித்தடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இதில், தனிநபர்கள் ஆக்கிரமிப்பால், பொது வழித்தடத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில்,''எங்கள் பகுதி மக்களுக்கு அவசர தேவை மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியில்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர், தெரு விளக்கு, சாலை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. குறுகிய அளவிலான வழிதடத்தை மட்டும் பயன்படுத்தி வந்தோம். தற்போது, மழையால் அதுவும் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. பென்னாகரம் தாசில்தார், பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வேறு வழியின்றி சேரும் சகதியுமான வழி தடத்தில், மண் கொட்டி சீர் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டோம்,'' என்றார்.

Advertisement