நிலத்தை உழுதும் உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் பரிதவிப்பு; அதிக விலை கொடுத்து வாங்கும் பரிதாபம்

திருச்சுழி அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவ மழையை எதிர்பார்த்து நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். பயிர் இடுவதற்கு முன்பு உரங்களை தெளித்த பின் பயிரிடுவர். இதில் முக்கியமாக தேவைப்படுவது யூரியா, டி.ஏ.பி., காம்பிளக்ஸ் உரங்கள். இந்த உரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில், தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசின் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.


தற்போது, நிலங்கள் உழுது தயார் நிலையில் உள்ளது. 25 நாட்களுக்குள் உரங்களை தெளித்து பயிரிட வேண்டிய சூழ்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் கிடைப்பதில்லை. ஒரு விவசாயிக்கு 50 ஏக்கர் நிலத்திற்கு 50 மூடை டி.ஏ.பி., தேவை என்றால் அரசு ஒரு ஆதார் அட்டைக்கு 2 மூடை உரங்கள் தான் வழங்குகின்றது. இதை வைத்துக் கொண்டு எப்படி உரமிடுவது என விவசாயிகள் புலம்புகின்றனர். கூட்டுறவு சங்கங்களில் 1 மூடை டி.ஏ.பி., உரம் ரூ.1200 என்றால், தனியார் உரக்கடைகளில் ரூ.1500, முதல் ரூ.1800 என்ற விலையில் விற்கப்படுகிறது. அரசு கூட்டுறவு சங்கங்களில் போதுமான இருப்பு இல்லாததால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

திருச்சுழி அருகே பரளச்சி, வடக்கு நத்தம், புல்லா நாயக்கன்பட்டி, பொம்ம நாயக்கன்பட்டி, போத்தம்பட்டி, கஞ்சம்பட்டி, தெற்கு நத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் திணறி வருகின்றனர். இந்தப் பகுதியிலுள்ள 7க்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் போதுமான உரங்கள் இருப்பு இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்குவதற்கும், தனியார் உரக்கடைகளில் அதிக விலைகளில் விற்கப்படுவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுகுறித்து, சங்கரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: திருச்சுழி, பரளச்சி பகுதிகளில் விவசாயிகள் உரங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். பட்டா வைத்திருப்பவர்களுக்கு ஓரளவிற்கு உரங்கள் கிடைக்கிறது. குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களுக்கு அதுவும் கிடைப்பது இல்லை. இவர்கள் தனியார் உர கடைகளில் உரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் தேவையான உரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement