பட்டாசு ஆலைகளை அனுமதிக்க கூடாது எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா பகுதியில் 40 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பட்டாசு ஆலையில் திடீரென விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். விவசாய நிலங்களை சுற்றி பட்டாசு ஆலைகள் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

துாத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டூர் விலக்கு பகுதியில் கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது, ஏற்கெனவே வழங்கி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகள் கூறியதாவது:



விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் தொடங்குவதற்கும் இயங்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

முறையாக அனுமதி பெறாமல் இயங்கக்கூடிய ஆலைகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அப்பகுதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா பகுதியில் பட்டாசு ஆலை அமைக்க உரிமம் பெற்று ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எட்டையபுரம் தாலுகாவில் புதிதாக துவங்கப்பட்ட பட்டாசு ஆலைகளை உடனடியாக மூட வேண்டும். புதிதாக எந்த பட்டாசு ஆலைக்கும் அரசு அனுமதி வழங்க கூடாது. மீறி அனுமதி வழங்கினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினர்.

Advertisement