'விஜய், சீமான் போன்றவர்களுக்கு ஜி.எஸ்.டி., பற்றி எதுவும் தெரியாது' பா.ஜ., கிண்டல்

2

மதுரை : ''சரக்கு வரி என்றால், மதுவுக்கு வரி விதிக்காதது ஏன் என கேட்டவர் சீமான்,'' என பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

மதுரையில் அவர் கூறியதாவது:



தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு வரி என்றால் என்னவென்றே தெரியவில்லை.


'சரக்கு வரி என்றால் மதுவிற்கு ஏன் வரி விதிக்கவில்லை?' என இதற்கு முன்பு சொன்னவர் தான் சீமான். அவருக்கு தெரிந்த ஒரே சரக்கு அதுதான்.




நாட்டின் 17 வகையான மறைமுக வரிகளை, ஒரே வரியாக கொண்டு வருவது தான் ஜி.எஸ்.டி.,யின் நோக்கம். இன்று இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர்ந்ததற்கு ஜி.எஸ்.டி., பங்கு முக்கியமானது.



அனைத்து மாநில நிதி அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து தான், ஜி.எஸ்.டி., கவுன்சிலில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காங்., மூத்த தலைவர் சிதம்பரம் போன்ற ஹார்வர்டு பல்கலையின் அறிவுலக மேதைகள் ஆட்சியில் இருந்தபோது, ஜி.எஸ்.டி.,யை ஏன் அறிமுகப் படுத்தவில்லை?



பீஹார் தேர்தல் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியின் கவனம்
தமிழகத்தின் பக்கம் திரும்பும்.



தமிழகத்தில் கூட்டணியின் சிறு பிரிவுகள், குழப்பங்கள் சரி செய்யப்படும். முன்னாள் அமைச்சர்
செங்கோட்டையனின் அ.தி.மு.க., ஒன்றிணைப்பு பற்றி பேசிய விஷயத்தை மதிக்கிறேன். ஆனால், சொன்ன விதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.



இதை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்காமல், அ.தி.மு.க., மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கலாம். செங்கோட்டையனின் நோக்கம், பழனிசாமியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது தான். ஒன்றிணைந்த அ.தி.மு.க., இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement