தியேட்டர்களில் காலை, மதியம், இரவு காட்சி என்பது போல் கோவில்களை மாற்றுவதா?

திருப்பூர் : 'பிரேக்கிங்' தரிசனம் என்ற பெயரில் நவீன பொருளாதார தீண்டாமையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழக சட்டசபை 2025 - 26 மானிய கோரிக்கை எண் 47ன்படி, பெருவாரியான பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் பிரேக்கிங் தரிசனம் ஏற்படுத்தப்படும் என்று, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
திருச்செந்துாரில் இந்த நடைமுறை முதலாவதாக அமல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெருவாரியான பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சியாகவே, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறிய மற்றும் பெரிய கோவில்களின் நிலைமை பரிதாபகரமான நிலையில் உள்ளன.
விழாக்கால சிறப்பு பஸ் கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், பிரசாத கட்டணம் என, அதிக பணம் வசூலிக்கும் நிலையங்களாக அறநிலையத்துறை மாறி இருக்கிறது. ஆகம விதிகளின்படி மதியம் உச்சிக்கால பூஜை முடிந்த பின், கோவில் நடை அடைப்பது வழக்கம். ஆனால், கட்டணம் வசூலிக்கும் நோக்கோடு ஆகம விதிகளுக்கு எதிராக மதியம் 3:00 முதல், 4:00 மணி வரை கோவில்களை திறந்து வைக்கலாம் என அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
இடை நிறுத்த தரிசனமே தவறு என்கிறபோது, 500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது, கடவுளை காட்சிப் பொருளாக்கும் நியாயமற்ற அரசின் நிர்வாகத்தை காட்டுகிறது.
ஏற்கனவே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மதியம் 1:00 மணிக்கு மேல் கட்டணம் பெற்று, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது, மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
சினிமா தியேட்டர் போல் காலை, மதியம், இரவு காட்சி என கோவில்களை மாற்றுவது, கோவில்களின் பாரம்பரியத்தை அழிக்கும் செயல். ஒருபுறம் கோவில்களில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தருவதில்லை.
மறுபுறம் சிதிலமடைந்த கோவில்களை செப்பனிடுவதுமில்லை. 37,000 கோவில்களில் விளக்கு எரியும் வசதியில்லை என கோர்ட்டில் தமிழக அரசு தன் வாதத்தை எடுத்து வைக்கிறது.
அறநிலையத்துறையின் அவலங்களை பலமுறை கோர்ட் கண்டித்தும் கூட, இதுவரை கோவில்கள் விஷயத்தில் தமிழக அரசு அக்கறையின்றி இருந்து வருகிறது.
பல்வேறு ஆன்மிக அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பால், பிரேக்கிங் தரிசன கட்டண முறை என்ற நவீன பொருளாதார தீண்டாமையை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும்
-
ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்
-
மேலப்பாளையத்தில் போலி பத்திரப்பதிவு சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
-
நடராஜருக்கு ஆவணி சதுர்த்தி மகா அபிஷேகம்
-
பழனிசாமி இன்று திருக்கோவிலுார் வருகை மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு
-
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க கண் சிகிச்சை முகாம்
-
சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா