4 ஏரிகளை மீட்டெடுக்க ரூ.1,240 கோடி திட்டம்: தீர்ப்பாயத்தில் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை
சென்னை: 'கடப்பேரி, பெரிய ஏரி, திருநீர்மலை ஏரி, வீரராகவன் ஏரி ஆகிய நான்கு ஏரிகளில், ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஏரிகளை மீட்டெடுக்க, 1,240 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி யில் உள்ள கடப்பேரி, பெரிய ஏரி, திருநீர்மலை ஏரி, வீரராகவன் ஏரியும், கழிவுநீர் கலப்பாலும், கழிவுகள் கொட்டுவதாலும் மாசடைந்துள்ளது. ஆக்கிரமிப்பாலும் இந்த ஏரிகள் சுருங்கிவிட்டன.
இதுகுறித்து, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
தீர்ப்பாய உத்தரவின்படி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் தாக்கல் செய்த அறிக்கை:
கடப்பேரியில் அடையாளம் காணப்பட்ட, 438 ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நீர்வளத்துறை துவங்கியுள்ளது. ஏரியில் மாசுபட்ட நீரை அகற்றி, துாய்மைப்படுத்தும் பணி, 1.77 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. தொண்டு நிறுவன உதவியுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
திருநீர்மலை ஏரியில் கழிவுநீர் கலப்பை தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஏரிக்கரையில் நடைபாதை, மின் விளக்குகள் என, அழகுப்படுத்தும் பணிகள், 1.53 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது.
வீரராகவன் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், தாம்பரம் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு வடிகால்வாய் பணியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இத ற்காக, 1,240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தாம்பரம் தாசில்தார் அளித்த தகவல்களின்படி, இந்த ஏரிகள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்புச் சட்டம் - 2007ன்படி, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம், நீர்வளத் துறையிடம் உள்ளது. அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.
பெரிய ஏரி முன்பு திடக்கழிவுகள் கொட்டும் இடமாக இருந்தது. இந்த ஏரியில், 2028 முதல், ஏழு கோடி ரூபாய் செலவில், 'பயோ மைனிங்' முறையில் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஏரிக்கரையில் என்.ஜி.ஓ., வாயிலாக நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க லட்சுமிபுரம், நாகல்கேணி, பம்மல் பகுதிகளில், 90 சதவீதம் பாதாள சாக்கடை வசதி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும்.
ஏரியில் குப்பை கொட்டு வதை தடுக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது. ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏரிகளில் ஆக்கிரமிப்பு களை அகற்ற நீர்வளத்துறை, வருவாய்த்துறைக்கு தேவையான ஆட்கள், இயந்திரங்களை மாநகராட்சி வழங்கி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'