தொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

விழுப்புரம்:தொழிலாளி வீட்டில், 27 சவரன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அருகே சொரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதா, 60; சலவை தொழிலாளி. இவர், கடந்த ஏப்., 7 ம் தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, பின்பக்க கதவை உடைத்து கொண்டு வந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 27 சவரன் நகையை திருடி சென்றனர். வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று சிறுவந்தாடு பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையின் போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிராமம், குபேரபட்டினம் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் விக்ரம்,27; என தெரியவந்தது. மேலும், ராதா வீட்டில் திருடிய நபர்களில் ஒருவர் என்பதை ஒப்புகொண்டார். அவரிடம் இருந்து போலீசார் ரூ.10 ஆயிரம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் இருவர் சம்மப்பந்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். கைதான விக்ரம் மீது, திருவண்ணாமலை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement