தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் கரூர் சம்பவம் வரை... யார் இந்த அருணா ஜெகதீசன்?

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். இதற்கு முன்பு பல்வேறு விசாரணை குழுக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன், இதற்கு முன்பாக பல்வேறு முக்கிய வழக்குகளில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதேபோல, பல முக்கிய விசாரணைக் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார். அவர் யார் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
அதாவது, 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்திற்கு அருணா ஜெகதீசன் தலைமை வகித்தார். சுமார் 4 ஆண்டு காலம் இது தொடர்பாக விசாரணை நடத்தி கடந்த 2022ம் ஆண்டு முதல்வரிடம் அருணா ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், போலீசார் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை வகித்தார்.
இதுபோன்று பல்வேறு விசாரணை ஆணையங்களில் திறம்பட செயல்பட்ட அருணா ஜெகதீசனின், இந்த கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
@block_G@
விசாரணை தொடங்கியது
கரூரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேரில் ஆய்வு செய்தார். கூட்டநெரிசல் ஏற்பட்ட இடங்களில் பார்வையிட்டு, விசாரணையை தொடங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; குறைபாடுகள் களைய வேண்டும். அதுக்கு தான் ஆணையம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் தான் பார்க்க வேண்டும்,என்றார்.block_G









