உயிரிழந்த 40 பேர் உடல்களும் உறவினரிடம் ஒப்படைப்பு!

5


கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் பலியான 40 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அவர், உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் உதயநிதி கூறியதாவது: கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது. இனிமேல் இது போன்று விபத்துக்கள் நடக்கக் கூடாது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஒப்படைப்பு



கரூரில் பலியான 40 பேரில், 30 பேரது உடல்கள் இன்று காலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்த 40 பேரில் 32 பேர் கரூரை சேர்ந்தவர்கள். இது பேரிழப்பு.

அரசு சார்பில் என்னென்ன செய்ய முடியுமோ செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் தனித்தனியாகப் பேசியுள்ளேன். இங்கு கரூர் மற்றும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் என மொத்தம் 345 பேர் பணிகளில் உள்ளனர். இனிமேல் இதுபோல் விபத்துகள் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

நடவடிக்கை



ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கொடுக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் முதல்வர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார். இபிஎஸ் ஏற்கனவே அதே இடத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். டிஜிபி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். யார் மீதும் தவறு என்று அரசியல் பேச விரும்பவில்லை.

மக்களைச் சந்திப்பது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உள்ள உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், ஒவ்வோரு கூட்டத்திற்கு எவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

2,3 கேள்விகள்




கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்பு. உரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும். சில விஷயங்களை செய்யாதீர்கள், மரத்தின் மீது ஏறாதீர்கள், மக்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். இதற்கு மேல் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சம்மந்தப்பட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம் கட்டத் தலைவர்களின் பொறுப்பு. வாரந்தோறும் அவர் (விஜய்) வருகிறார். உங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். தயவு செய்து அவரையும் இரண்டு, மூன்று கேள்வி கேளுங்கள். இவ்வாறு உதயநிதி கூறினார்.

மீதம் இருந்த 10 பேர் உடல்களும், மாலை 4 மணிக்கு முன்னதாக உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டன.

திமுக, முதல்வர் நிகழ்ச்சிகள் ரத்து



கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கரூர் துயரச்சம்பவம் காரணமாக, ராமநாதபுரத்தில் இன்று நடக்க இருந்த முதல்வர் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. நாளை செப் 29ல் ரோடு ஷோ, நாளை மறுநாள் (செப்.,30ல்) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

Advertisement