சிவகங்கை மருத்துவமனையில் பயிற்சி டாக்டரை தாக்க முயற்சி

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தகராறு செய்து பயிற்சி டாக்டரை தாக்க முயற்சி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் அதிகாலை12:00 மணிக்கு பாலமுருகன் 26 என்பவர் டூவீலர் விபத்தில் சிக்கி அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார்.

டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. அவருடன் வந்தவர்கள் சிகிச்சை அளித்த டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் பயிற்சி டாக்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பயிற்சி டாக்டரை தள்ளிவிட்டு தாக்க முயற்சித்தனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவ பணியாளர்கள், போலீசார்அவர்களை விலக்கி விட்டனர்.

மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: இது குறித்து மருத்துவ பணியாளர்கள் பயிற்சி டாக்டரிடம் விசாரித்து வருகிறோம். தகராறில் ஈடுபட்டு பயிற்சி டாக்டரை தாக்க முயற்சித்தவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்க உள்ளோம்.

இரவு நேரத்தில் அவசர பிரிவு வார்டில் உள்ள புற காவல் நிலையத்தில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த பலமுறை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மருத்துவமனையில் அடிக்கடி இரவு நேரத்தில் இதுபோல் பிரச்னை வந்த வண்ணம் உள்ளது என்றனர்.

Advertisement