அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாசுக்கு டிரம்ப் 4 நாட்கள் கெடு

வாஷிங்டன்: '' காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்படும்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது காசா போர் நிறுத்தத்துக்கான 20 அம்சத் திட்ட அறிக்கையை இஸ்ரேல் பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
இதன்படி,
* ஹமாஸ் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்தால், அடுத்தக்கட்டமாக படிப்படியாக இஸ்ரேல் படையினர் காசாவில் இருந்து வெளியேறுவார்கள்.
* அமைதியை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்காலிக சர்வதேச படை நிலை நிறுத்தப்படும்.
* ஹமாஸ் படையினர் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
* இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்.
இந்த அமைதி ஒப்பந்த அறிக்கையை ஹமாஸ் அமைப்பிடம் மத்தியஸ்தர்கள் அளித்துள்ளனர். இது தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பினர், அது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும்படி அந்த அமைப்புக்கு முஸ்லிம் நாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்
இதனிடையே, கத்தாரில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் கத்தார் பாதுகாப்பு படையினர் உயிரிழந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரினார். இதனையடுத்து காசாவில் அமைதி ஏற்பட மீண்டும் மத்தியஸ்த பணியில் ஈடுபட உள்ளதாக கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமைதிஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஹமாஸ் அமைப்புக்கு 3- 4 நாட்கள் அவகாசம் தரப்படும். இந்த அமைதி ஒப்பந்தத்தை அரபு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. முஸ்லிம் நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது. ஹமாசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் ஏற்றக் கொள்வார்களா இல்லையா என தெரியாது. ஏற்கவில்லை என்றால், அவர்களின் முடிவு மோசமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
-
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் குருநானக் கல்லுாரி வெற்றி
-
பதிவில்லாத கட்டுமான திட்டங்கள் மீதான புகாரை விசாரிக்க முடியாது ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு