பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா தடுத்தது; 17 ஆண்டுகளுக்கு பின் சிதம்பரம் வெளிப்படை

புதுடில்லி : ''மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருந்தோம். சர்வதேச நாடுகள் மற்றும் நம் வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாட்டால் முடிவை கைவிட்டோம்,'' என, முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவ., 26ல், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 175 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த போது, மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. காங்கிரசைச் சேர்ந்த மறைந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த தாக்குதலுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.
சம்பவம் நடந்து, 17 ஆ ண்டுகளான நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்பது குறித்து, சிதம்பரம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டி:
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. டில்லிக்கு வந்த அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், என்னையும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கையும் சந்தித்து, 'தயவுசெய்து பாக்., மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, கேட்டுக் கொண்டார்.
'இது பற்றி அரசு முடிவெடுக்கும்' என, அவரிடம் கூறினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் இருந்தது. ராணுவ நடவடிக்கை தொடர்பாக, மன்மோகன் சிங்கும் அதிகாரிகளுடன் விவாதித்தார்.
பாக்., மீது தாக்குதல் நடத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடந்தது. இறுதியில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளியுறவு சேவை கேட்டுக் கொண்டதால், பதிலடி கொடுக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
@quote@ தடுத்தது யார்? வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை கைவிட்டதாக காங்., மூத்த தலைவர் சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார். பதிலடி கொடுக்க அவர் தயாராக இருந்துள்ளார். ஆனால் யாரோ அவரை தடுத்துள்ளனர். சிதம்பரத்தை தடுத்தது யார்? சோனியாவா அல்லது மன்மோகன் சிங்கா? - செஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,quote
மேலும்
-
பிரசாரத்தை ஏன் நிறுத்தவில்லை? விஜய் தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி
-
விஜய்க்கு ராகுல் ஆறுதல்; பலிக்காத தி.மு.க.,வின் திட்டம்
-
பீஹார் வாக்காளர் பட்டியல் வெளியீடு; பழையதை சீரமைத்ததில் 6% பேர் குறைப்பு
-
ஐகோர்ட்டுகளுக்கு அதிக விடுப்பு தருவதா? பிரதமரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு
-
மத்திய அரசுடன் அமைதி பேச்சுக்கு முரண்டு பிடிக்கும் அமைப்புகள்
-
2023ல் சைபர் குற்றங்கள் 31 சதவீதம் அதிகம்; தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் தகவல்