விஜய்க்கு ராகுல் ஆறுதல்; பலிக்காத தி.மு.க.,வின் திட்டம்

த.வெ.க., தலைவர் விஜயிடம் பேசிய, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'நீங்கள் கவலைப்பட வேண்டாம்; காங்கிரஸ் துணை நிற்கும்' என, நம்பிக்கை அளித்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி, நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட விஜய், கரூர் சென்றார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது விஜய்க்கும், த.வெ.க.,வுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தன் பிரதான அரசியல் எதிரியாக, தி.மு.க.,வை முன்வைத்து அக்கட்சியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
அத்தோடு நிற்காமல், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் ஊழலில் ஊறித்திளைத்த குடும்பம், 'வெளிநாட்டு முதலீடா; வெளிநாட்டில் முதலீடா' என, முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்ற போது கேள்வி எழுப்பி விமர்சித்தார்.
இது, தி.மு.க.,வினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிலுக்கு விஜயை அவர்கள் கடும் சொற்களால் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
ஆனால், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், விஜயை நட்போடு அணுகி வருகிறது.
காங்கிரசில் ஒரு தரப்பினர், குறிப்பாக ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் போன்றவர்கள், 'த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்கலாம். அவர் பிரசாரம் செய்வது, கேரளத்திலும் ஆட்சியைப் பிடிக்க உதவும்' என, நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால், விஜயை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்காமல், நட்பு பாராட்டுகின்றனர்.
இச்சூழலில், கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தி.முக., தரப்பில் ராகுலை தொடர்பு கொண்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், 'தி.மு.க.,வை குறிவைத்து விஜய் பிரசாரம் செய்கிறார். தி.மு.க., அரசையும், ஸ்டாலின் குடும்பத்தையும் மிகமிக கடுமையாக விமர்சிக்கிறார்.
'இது மாணவர்கள், இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், சிறுபான்மையினர் ஓட்டுகளையும் நாம் இழக்க நேரிடும். எனவே, விஜய்யிடம் பேசி, அவரை தி.மு.க.,வுக்கு எதிராக பேச வேண்டாம் என சொல்லுங்கள்' என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்படி, விஜயிடம் தொலைபேசியில் ராகுல் பேசியுள்ளார். ஆனால், தி.மு.க., தரப்பினர் வலியுறுத்தச் சொன்னது எதையும் பேசாமல், 'இந்த இக்கட்டான தருணத்தில் நானும், காங்கிரஸ் கட்சியும் உங்களுடன் இருப்போம்; கவலைப்பட வேண்டாம்' என, ஆறுதலாக பேசியுள்ளார்.
அப்போது, கரூரில் தி.மு.க.,வினரும், காவல் துறையும் நடந்து கொண்ட விதம் குறித்து, ராகுலிடம் விஜய் எடுத்துக் கூறியுள்ளார். இதையறிந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸ் கூட்டணி அவசியம் என்பதால், மவுனமாக இருந்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் தொலைபேசியில் பேசி அளித்த ஆறுதல், நம்பிக்கையை தொடர்ந்தே, கரூர் சம்பவத்துக்காக, 'நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடருவேன்' என, விஜய் வீடியோ வெளி யிட்டதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -








