ஐகோர்ட்டுகளுக்கு அதிக விடுப்பு தருவதா? பிரதமரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு

புதுடில்லி: 'உயர் நீதிமன்றங்களுக்கு அதிக விடுப்பு வழங்கப்படுவதால், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுகிறது' என, பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முக்கிய உறுப்பினராக இருப்பவர் சஞ்சீவ் சன்யால். இவர், நம் நாட்டின் சட்ட அடித்தளத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.
மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் பேசிய சஞ்சீவ் சன்யால், உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் நீண்டகால விடுப்புகள் குறித்து விமர்சித்தார்.
'விக்சித் பாரத்' எனப்படும், வளர்ந்த இந்தியாவாக மாற்றுவதற்கான வளர்ச்சிப் பாதைக்கு நீண்டகால விடுப்புகள் தடைக்கற்களாக இருக்கின்றன' என, கருத்து கூறியிருந்தார். இது நீதித்துறையில் இருப்பவர்களை வெகுவாக அதிருப்தி அடைய வைத்துள்ளது.
சன்யாலின் இந்த பேச்சு தவறானது என உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஷ் சிங் தற்போது போர்கொடி உயர்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
உயர் நீதிமன்றங்களின் விடுமுறை குறித்து முழுதாக தெரியாதவர்களே, தவறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விடுமுறை என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது அல்ல. உயர் நீதிமன்றங்களின் விடுமுறை குறித்து புரிந்து பேச வேண்டும். அதற்கு உயர் நீதிமன்றங்களில் வழக்கமான வேலை நாட்களில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளின்போது 'மை லார்டு' போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவது குறித்தும் சன்யால் விமர்சித்திருந்தார். இந்த பழக்கங்கள் தான் நீதித் துறையின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என கூறியிருந்தார்.
நீண் ட காலமாக நீதிமன்றங்களில் வழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் நிச்சயம் அகற்றப்பட வேண்டியவை என அதற்கு மட்டும் விகாஷ் சிங் ஆதரவு தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்த காலத்தில் கூட, உயர்
நீதிமன்றங்களின் விடுப்பு குறித்து சன்யால் விமர்சித்திருந்தார்.




