மத்திய அரசுடன் அமைதி பேச்சுக்கு முரண்டு பிடிக்கும் அமைப்புகள்

புதுடில்லி: லடாக்கில், லே தன்னாட்சி குழுவைத் தொடர்ந்து, கே.டி.ஏ., எனப்படும் கார்கில் ஜனநாயக கூட்டணியும், 'கைதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடுவிக்கப்படும் வரை மத்திய அரசுடன் பேச்சு நடத்த முடியாது' என, அறிவித்து உள்ளது.


லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி, கடந்த 24ல் லேவில் போராட்டம் நடந்தது.




வன்முறை இதை வலியுறுத்தி சமூக ஆர்வலரான வாங்சுக் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அன்றைய தினம் திடீரென வன்முறை வெடித்தது.



லேவில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.



பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். வன்முறையை துாண்டியதாகக் கூறி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாங்சுக் கைது செய்யப்பட்டார். மேலும், 50க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.



பாக்., உளவாளியுடன் வாங்சுக்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.



மா நில அந்தஸ்து விவகாரத்தில், தீர்வு காண பேச்சு நடத்த வரும்படி, லே தன்னாட்சி குழுவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.



இதை ஏற்க மறுத்த அக்குழுவினர், 'வாங்சுக் உள்ளிட்டோர் விடுவிக்கப்படும் வரை பேச்சு நடத் த முடியாது' என்றனர்.



இந்நிலையில், லே தன்னாட்சி குழுவைத் தொடர்ந்து, கார்கில் ஜனநாயக கூட்டணியும், 'வாங்சுக் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படும் வரை மத்திய அரசுடன் பேச்சு நடத்த மாட்டோம்' என நேற்று அறிவித்தது.


விசாரணை



இது குறித்து, கார்கில் ஜனநாயக கூட்டணியின் இணைத் தலைவர் அஸ்கர் அலி கர்பலாய் கூறியதாவது:



லே தன்னாட்சி குழு எடுத்த முடிவில் நாங்கள் உடன்படுகிறோம். கைதான சமூக ஆர்வலர் வாங்சுக் மற்றும் பலரை விடுவிக்கும் வரை, மத்திய அரசுடன் பேச்சு நடத்த மாட்டோம்.

மேலும், வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றால், மத்திய அரசுடன் பேச்சு நடத்துவோம். லடாக்கைச் சேர்ந்தவர்களை தேச விரோதிகள் என அழைப்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement