மடத்துக்குளத்தில் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை; மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்

உடுமலை; மடத்துக்குளம் தாலுகாவில் செயல்படும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்கவும், தேவையான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகாவில், 11 ஊராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகள் உள்ளன. ஏறத்தாழ, 3 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், மருத்துவ வசதிகள் போதிய அளவு இல்லை.
மடத்துக்குளத்திலுள்ள அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவ வசதிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, உடுமலை மற்றும் கோவை மருத்துவமனைகளை சார்ந்து இருக்கும் அவல நிலை உள்ளது.
இரவு நேரங்களில், அவசர மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது. மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், போதிய அளவு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போல், மடத்துக்குளம் தாலுகாவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ தேவைகளுக்காக சுகாதாரத்துறை சார்பில், கணியூர் அரசு முதன்மை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், 19 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
இங்கும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான சிகிச்சை, தடுப்பூசி மற்றும் காய்ச்சல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சைகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களை சார்ந்து இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இதில், அரியநாச்சிபாளையம், கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம், குப்பம்பாளையம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.
போதிய வசதிகள் இல்லாமல் செயல்படும் துணை சுகாதார நிலையங்களுக்கு, சொந்த இடம் தேர்வு செய்து, அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட வேண்டும்.
மேலும், காரத்தொழுவு, கொழுமம், என்.ஜி.,புதுார், நீலம்பூர், மைவாடி ஆகிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள், பழமையானதாகவும், பராமரிப்பின்றி சிதிலமடைந்து எந்நேரமும் விழும் அபாய நிலையில் உள்ளது.
அதே போல், கடத்துார், ஆர்.ஜி.,புதுார், துங்காவி, மைவாடி, கொழுமம், பாப்பான்குளம், நீலம்பூர், ருத்ராபாளையம், போத்தநாயக்கனுார், சாமராயப்பட்டி, சோழமாதேவி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை புதுப்பிக்கவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
துணை சுகாதார நிலையங்களில், டாக்டர்கள், செவிலியர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தவும், கணியூர் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
-
தெலங்கானாவில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து 400 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
-
விழுப்புரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி; மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது சோகம்