பழிக்கு பழியாக சித்தப்பா படுகொலை வில்லியனுாரில் மகன்கள் உட்பட 7 பேர் கைது

வில்லியனுார்:வில்லியனுார் அருகே முன்விரோதம் காரணமாக சித்தப்பாவை வெட்டி படுகொலை செய்த, அண்ணன் மகன்கள் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை டி.வி., நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அப்பு (எ) அன்பழகன், 24. தொண்டமாநத்தம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் சாலையில் உள்ள பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

விசாரணையில் அப்புவின் அண்ணன் மகன்களான பிரவின், 25; பிரதீஷ், 24, ஆகியோர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, பழிக்கு பழியாக அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று காலை வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த பிரவின், 25; பிரதீஷ், 24, அவரது நண்பர்கள் சோனாம்பாளையம் ஆதவன் மகன் மணி (எ) மணிகண்டன், 33; பாண்டுரங்கன் மகன் வாசுதேவன், 35; வைஷியால் வீதி ஞனவேல் மகன் பழனி, 24; திப்புராயன்பேட்டை செல்வம் மகன் இளைய அன்பரசன், 24; ரெட்டியார்பாளையம் சந்திரசேகர் மகன் ஜிவா, 24; ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னையில் அப்பு தனது பெரியப்பா மகன் பிரபுவை கடந்த 2015ல் படுகொலை செய்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.வி., நகருக்கு சென்ற அப்பு, சொத்து பிரச்னை குறித்து, பிரபுவின் மகன்களான பிரவீன், பிரதீஷ் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார். ஏற்கனவே தந்தையை கொலை செய்த அப்பு மீது கோபத்தில் இருந்த பிரவீன், பிரதீஷ் இருவரும், அப்புவை பழிக்கு பழியாக கொலை செய்ய முடிவு செய்து, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

அதையடுத்து, நேற்று இரவு ஏழு பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement