பிளாஸ்டிக் கழிவால் கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு 

காசிமேடு : சென்னையில், பிளாஸ்டிக் கழிவு அதிகரிப்பால் கடல் மற்றும் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, கடல் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னையில் சர்வதேச துறைமுகம், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்டவற்றின் மூலம் தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடக்கிறது. அதேபோல, சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு தலமாக மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள் உள்ளன.

இத்தனை சிறப்புமிக்க கடல் மற்றும் கடற்கரை பகுதிகள் பராமரிப்பில், அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதன் காரணமாக, கடல் மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

கடல் சுற்றுச்சூழல் மட்டுமின்றி கடல் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கும் சிக்கலாகும் பிளாஸ்டிக்கால், பவளப்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.

கடலில் இருந்து பிளாஸ்டிக்கை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமானது; கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

எனவே, கடல் மற்றும் கடலோர சுற்றுச்சுழல் பாதுகாப்பை கருத்தில் வைத்து, கடற்கரை பகுதிகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, நெறிமுறைகள் வகுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த காலங்களை ஒப்பிடுகையில், கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது; இதற்கு சுருக்குமடி வலை ஒரு காரணம் என்றாலும், பிரதான காரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இந்த விவகாரத்தில், அரசும் கடலோர பகுதிகள் மக்களும் சுற்றுச்சூழல் பாதிக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

@block_B@

எண்ணுார், தாழங்குப்பத்தில் உயர் கோபுரம் அமைக்கப்படுமா?


சென்னையில் எண்ணுார் முதல் நீலாங்கரை பகுதி வரையிலான கடற்கரை பகுதிகளுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். கடலில் ஆனந்த குளியல் போடும் இவர்களில் சிலர் அலையில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக, பள்ளி விடுமுறை தினங்களில், நண்பர்கள் ஒன்றாக கூடி கடற்கரைக்கு வந்து, குளியல் போடுகின்றனர். அப்போது, எந்தவித பாதுகாப்பு கருவியும் இல்லாததால், சிலர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.

சமீபத்தில், மணலியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர், எண்ணுார் பகுதியில் கடலில் குளிக்கும்போது, அலையில் சிக்கி உயிரிழந்தனர். இந்தாண்டில் மட்டும், செப்., வரை, அப்பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கண்காணிப்பிற்காக, எண்ணுார், தாழங்குப்பம் மற்றும் பாரதியார் நகரில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுரங்களும் காணாமல் போய்விட்டன. போலீசாரும், கடற்கரைகளில் ரோந்து பணிக்கு செல்வது குறைந்து விட்டது. எனவே, மெரினா பகுதியில் உள்ளது போல, உயர் பாதுகாப்பு கோபுரங்களை அமைத்து, கடலோர காவல் படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலில் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புது உயர் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் பருவமழை துவங்க உள்ளதால், கடல் நீரின் போக்கு, கடல் ஆழம் உள்ளிட்டவை மாறுபடும். கடலில் நீச்சல் அடிக்க முடியாத நிலையும் ஏற்படும். இதனால், கடலுக்குள் இறங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்' என்றார்.block_B

Advertisement