ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்

தமிழகம் முழுதும் உள்ள பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் பணியில், தமிழக தொல்லியல் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
எழுத்துகள் தோன்றுவதற்கு முன், மனிதர்கள் தங்களுக்கான தகவல்களை ஓவியங்களின் வாயிலாக வெளிப்படுத்தினர். அவற்றில் பழமையானவை பாறை ஓவியங்கள்.
அனுபவம் அதாவது, மனிதர்கள் சமதளப் பகுதிகளுக்கு சென்று, வாழத் துவங்காத காலத்தில், குகைகளில் தங்கி வாழ்ந்தபோது, அவர்களின் அன்றாட நிகழ்வுகளையும், அவர்களின் அனுபவங்களையும் பாறை ஓவியங்களாக வரைந்தும், கீறியும் வைத்தனர்.
இவ்வாறான ஓவியங்கள்தான், பண்டைய மனிதனின் வாழ்வியல் முறைகளை ஆராயும் ஆய்வாளர்களுக்கு சான்றுகளாகி உதவுகின்றன. அந்த வகையில், தமிழகம் முழுதும் பல்வேறு பாறைகள், குன்றுகள், குகைகளில் பழமையான ஓவியங்கள் உள்ளதை, அங்கங்குள்ள ஆய்வாளர்களும், தொல்லியல் துறையினரும் அடையாளப் படுத்தி உள்ளனர்.
ஆய்வு பல ஓவியங்கள் அடையாளப் படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் பணியில், தமிழக தொல்லியல் துறை மும்முரமாக களமிறங்கி உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் அதிகளவில் பாறை ஓவியங்கள் உள்ள கிருஷ்ண கிரி மாவட்டத்தில் சென்னானுார், கொங்கனப்பள்ளி, வேப்பலாம்பட்டி, வேலம்பட்டி, சென்றாம்பட்டி.
பையூர், மொட்டையன்கோட்டை, மெடுகம்பள்ளி, மகாராஜகடை, நளகுண்டப்பள்ளி, மேலுார், அவதானப்பட்டி, பச்சிகாணும்பள்ளி, நாயகனுார் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட இடங்களில், தமிழக தொல்லியல் துறை யினர் ஆய்வு செய்துள்ளனர் .
இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் கூறியதாவது:
தமிழகத்தில் பரவலாக பாறை ஓவியங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, காப்புக் காடுகள், மலை உச்சிகள், ஆபத்தான வன உயிரினங்கள் வாழும் பகுதிகளில் உள்ளன.
அங்கு செல்வது மிகவும் ஆபத்தானதாக உள்ளதால், வன அலுவலர், உள்ளூர் பிரமுகர்களின் உதவியுடன் தொல்லியல், கலை, மானிடவியல், பண்பாட்டியல் உள்ளிட்ட துறை வல்லுனர்களுடன், ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்துள்ளோம்.
மேலும், தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, பாறை ஓவியங்கள் உள்ள இடங்களை, ஜி.ஐ.எஸ்., முறையில், 'மேப்'பாக பதிவு செய்து வருகிறோம். மேலும், ஓவியத்தை மட்டுமின்றி, அந்த பாறையின் அமைப்பையும் '3டி பிரின்டிங்', புகைப்படம், வீடியோ உள்ளிட்ட தொழில் நுட்பங்களின் வாயிலாகவும் ஆவணப்படுத்தி வருகிறோம்.
காலகட்டங்கள் பிற்காலத்தில், அந்த ஓவியங்களோ, பாறையோ சிதிலமடைந்தால், இந்த பதிவுகளை வைத்து, அதேபோன்ற அமைப்பை, 3டி பிரின்டிங் வாயிலாக உருவாக்க முடியும்.
இந்த ஓவியங்களில் மிகவும் பழமையான சிவப்பு வண்ணக் கோடுகள், அதன் பின்னான செஞ்சாந்து வண்ண கோடுகள், பிற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை வண்ணக் கோடுகள் என, அனைத்து காலகட்டங்களை சேர்ந்தைவையும் உள்ளன.
பழமையான ஓவியங்களில் மிருகங்களின் போக்கு, அவற்றை வேட்டையாடும் காட்சி, மனிதர்களின் போக்கு, வேட்டைக்குப் பின்னான களியாட்டம், சண்டை யிடும் காட்சிகள் உள்ளன.
கோட்டோவியங்களில் ஆண், பெண்ணை வேறுபடுத்த ஆணுறுப்பு, மார்பகங்கள் காட்டப் பட்டுள்ளன.
பிற்கால ஓவியங்களில் மான், மாடு, குதிரை, கழுதைகள் உள்ளன. தேர் காட்சிகளும், சடங்கு காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் வடிவியல் காட்சிகள் உள்ளன.
காட்சிகள் சந்திரன், சூரியன், பறவை முகத்துடன் மனிதன், மரங்கள் உள்ளிட்டவற்றுடன், அலங்கார கோடுகளும் வளைவுகளும் நிறைய காட்சிகள் உள்ளன.
இவற்றில், புதிய கற்காலம் முதல் இரும்பு காலம் வரையிலான ஓவியங்கள் அதிகம் உள்ளன. இரும்பு கால ஓவியங்களில், ஆயுதங்களின் முனையில் இரும்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
பெரும்பாலான ஓவியங்கள் மலையடிவாரத்திலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் உள்ளன. இவ்வாறான ஓவியங்களுக்கு அருகில், பண்டைய மனிதர்களின் வாழ்விடங்களையும் அடையாளப்படுத்தி உள்ளோம்.
பல ஓவியங்கள், இறந்தவர்களைப் புதைத்து, அதன் மீது பலகைக் கற்கள் நிறுத்திய கல் திட்டைகளிலும் உள்ளன. தற்போதும் பல பகுதிகளில் வழிபாடுகள் நடக்கின்றன.
சில கிராமங்களில், வழிபாட்டின் போது, இதுபோன்ற ஓவியங்கள் வரையும் மரபும் உள்ளது. மகாராஜகடை என்ற பாறை ஓவியம், மலையின் 1,000 அடி முகட்டில் உள்ளது.
பாறை ஓவியங்களில் உள்ள குறியீடுகள், அகழாய்வில் கிடைக்கும் பானை ஓடுகளிலும் உள்ளதால், தொடர் ஆய்வுக்கு முக்கிய சான்றாக உள்ளன.
இவற்றை தொடர்ச்சியாக நுால்களாகவும், 'டிஜிட்டல்' வடிவிலும் ஆவணப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
-
ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்துக்கு பதில் கில் கேப்டனாக நியமனம்
-
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
-
அறிவு சார்ந்த வலிமையே இந்தியாவின் மாபெரும் பலம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
-
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி