ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

சாயல்குடி: சாயல்குடி இருவேலி பகுதியில் இருந்து சந்தன மீரா ஓடை வழியாக எம்.ஜி.ஆர்., ஊருணி மற்றும் குடியிருப்பு கண்மாய் பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது.

சந்தன மீரா ஓடையில் இருந்து வரக்கூடிய ஓடையில் வழித்தடத்தில் அதிகளவு ஆக்கிரமிப்புகளால் ஓடையின் வழித்தடம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.

சாயல்குடி நகரில் இருந்து வெளியாகும் கழிவுநீர் வரத்துக்கால் வழியாக புகுந்து விவசாய நிலங்கள் பாதிப்பை சந்திக்கின்றன. வரத்து கால்வாயில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் இப்பிரச்னை ஏற்படுகிறது.

எனவே மழைக்காலத்திற்கு முன்பாகவே ஓடையின் வழித்தடத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கடலாடி தாசில்தார் பரமசிவன் கூறுகையில், ஓடை வழித்தடங்களில் உள்ள முட்புதர்கள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement