அமித் ஷா வருகையின்போது குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரி: சஸ்பெண்ட் செய்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் அமித்ஷா கேரளா வந்தபோது குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளா சென்றிருந்தார். அப்போது கொச்சி விமான நிலைய முனையத்தில் பாதுகாப்பு பணிக்கு கேரள ஆயுதப்படை பட்டாலியனின் அதிகாரி சுரேஷ்குமார் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

பணியில் அவர் குடிபோதையில் இருந்ததை கண்டு மூத்த அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து அவரை விடுவித்தனர். தொடர்ந்து அங்கமாலி மருத்துவமனையில் சுரேஷ்குமாருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில காவல்துறை தலைவர் சுரேஷ்குமாரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தார். மேலும் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

அதன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட, தற்போது சுரேஷ் குமாரை கேரள அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அவரை விசாரணைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Advertisement