இந்தியா போன்ற வீட்டில் ஒரு சிறிய அறை தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

புதுடில்லி: ''இந்தியா போன்ற ஒரு வீட்டில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது ஒரு சிறிய அறை தான். அன்னியர்கள் ஆக்கிரமித்த அந்த அறையை, நாம் திரும்ப பெற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:இந்நிகழ்ச்சியில் பல சிந்தி சகோதரர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை; பிளவுபடாத இந்தியாவுக்கு சென்றனர். அந்த வீடும், இந்த வீடும் வேறுபட்டவை அல்ல. இந்தியா முழுதும் ஒரே வீடு தான். ஆனால் யாரோ சிலர், வீட்டில் இருந்த ஓர் அறையை ஆக்கிரமித்து உள்ளனர். அதில் தான், மேஜை, இருக்கை, ஆடைகளை வைத்திருந்தேன். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த அறையை, நாளையே நாம் மீண்டும் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை, 'ஓர் அறை' என மோகன் பகவத் குறிப்பிட்டு பேசிய போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆரவாரமாக கைதட்டினர்.
கடந்த சில நாட்களாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாக்., அரசுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.


