கப்பலில் துன்புறுத்தியதாக புகார்; கிரெட்டா தன்பெர்க் சொல்வது பொய்; அடித்துச் சொல்கிறது இஸ்ரேல்!

ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்த நிலையில், அதில் இருந்த ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை, பொய் என இஸ்ரேல் மறுத்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் 67,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பட்டினியால் பலர் இறந்து வருகின்றனர்.
போர் துவங்கிய போது ஐ.நா., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், ஐ.நா.,வின் உதவியை நிறுத்தியது. அதற்கு பதில் காசா மனிதாபிமான அறக்கட்டளையை ஏற்படுத்தி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நிவாரண உதவிகளை வழங்குகிறது. இது போதுமான அளவு இல்லை என காசாவில் அவ்வப்போது மோதல் வெடிக்கிறது.
இந்நிலையில், 400க்கும் மேற்பட்ட தன்னார்வ குழுவினர் கப்பல்களில் காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் கிளம்பினர். அவர்களை இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் சர்வதேச கடல் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தது. 130க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர்.
அதில் மலேஷியாவைச் சேர்ந்த ஹஸ்வானி ஹெல்மி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வின்ட்பீல்ட் பீவர் ஆகிய இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர்.
அதில், 'இஸ்ரேல் ராணுவம் எங்களை விலங்குகள் போல நடத்தியது. ஸ்வீடன் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டாவை தள்ளிவிட்டனர். அவரை இஸ்ரேல் கொடியை அணியும் படி துன்புறுத்தினர்' என தெரிவித்தனர்.இதை கண்டித்து சர்வதேச அளவில் போராட்டங்கள் நடந்தது.
இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் ராணுவம் அளித்துள்ள விளக்கம்: கிரெட்டா தன்பெர்க் மற்றும் சுமூத் பிளோட்டில்லா கப்பலில் வந்த குழுவினர் மீது துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய். கைதிகளின் அனைத்து சட்ட உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் கிரெட்டா மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தங்கள் நாடு கடத்தலை தாமதப்படுத்தி காவலில் நீண்ட காலம் இருக்க விரும்பினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



