இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியானது 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
கடற்படையின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாக கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் இன்று தொடங்கியது. 12ம் தேதி வரை இந்தப் பயிற்சி நடக்கிறது.
இந்தியாவின் சார்பில் ஐஎன்எஸ் விக்ராந்தும், பிரிட்டன் தரப்பில் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சியின் போது பல வகையான பயிற்சிகளை இருநாடுகளின் கடற்படை வீரர்களும் மேற்கொள்ள இருக்கின்றனர். இரு படைகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பல்வேறு வகை விமானங்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கும்.
வான் திறன்களை அதிகரிப்பது, கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது, பிராந்தியத்தில் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துவது, செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவது ஆகியவை இந்தக் கூட்டுப்பயிற்சியின் நோக்கமாகும்.
