உலக விளையாட்டு செய்திகள்

ஜோகோவிச் ஜோர்
ஷாங்காய்: சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேனை தோற்கடித்தார்.


தென் ஆப்ரிக்கா முதலிடம்

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ரக்பி சாம்பியன்ஷிப் 6வது சுற்று போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 29-27 என, அர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஆறு போட்டியில் 4 வெற்றி, 2 தோல்வி என 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா சாம்பியன் ஆனது.


பிரேசில் அணி ஏமாற்றம்
சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் பிரேசில் அணி 0-1 என, ஸ்பெயினிடம் வீழ்ந்தது. மூன்று போட்டியில் ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் பிரேசில் அணி வெளியேறியது.


லிவர்பூல் அணி அதிர்ச்சி

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான போட்டியில் லிவர்பூல் அணி 1-2 என, செல்சி அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆர்சனல் அணி 2-0 என, வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தியது.


எக்ஸ்டிராஸ்


* சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் ஜோடி 6-7, 2-6 என அமெரிக்காவின் ராபர்ட் கேஷ், டிராசி ஜோடியிடம் தோல்வியடைந்தது.


* பிரேசிலில் நடந்த 'கிராண்ட் செஸ் டூர்' தொடரின் 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 8-20 என, அமெரிக்காவின் ஆரோனியனிடம் தோல்வியடைந்தார்.


* அமெரிக்காவில் நடந்த 'செக்மேட்' செஸ் போட்டியில் அமெரிக்க அணி 0-5 என இந்தியாவை வீழ்த்தியது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


* கொரிய ஓபனில் காயமடைந்த இந்திய பாட்மின்டன் வீரர் பிரனாய், இம்மாதம் ஐரோப்பாவில் நடக்கவுள்ள தொடர்களில் இருந்து விலகினார்.


* இந்தியா, சீனா அணிகள் (17 வயது) மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டிகள் (அக். 8, 10) பீஜிங்கில் நடக்கவுள்ளது.

Advertisement