ஆனந்தை முந்தினார் காஸ்பரோவ் * 'கிளச்' செஸ் போட்டியில்...

செயின்ட் லுாயிஸ்: 'கிளட்ச்' செஸ் முதல் நாள் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் பின் தங்கினார்.
அமெரிக்காவில் முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 55, ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் நடக்கிறது. கடைசியாக 1995ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இருவரும் மோதினர். தற்போது 30 ஆண்டுக்குப் பின் மீண்டும் இருவரும் மோதுகின்றனர். மொத்தம் 12 போட்டிகள் நடக்கின்றன.
முதல் நாளில் 4 போட்டி நடந்தன. முதலில் நடந்த இரு போட்டி 'டிரா' ஆகின. மூன்றாவது போட்டியில் ஆனந்த், வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் முந்திய ஆனந்த், அடுத்தடுத்த செய்த தவறுகள் செய்ய, காஸ்பரோவ் ஆதிக்கம் செலுத்தினார். பின் மீண்டு வந்தார் ஆனந்த்.
45வது நகர்த்தலில் ஆனந்த் செய்த தவறு காரணமாக, போட்டியின் 50 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இருவரும் மோதிய நான்காவது போட்டி 'டிரா' ஆனது. முதல் நாள் முடிவில் ஆனந்த் 1.5-2.5 என்ற கணக்கில் பின்தங்கினார்.