டில்லியில் எளிதாக வெல்லுமா இந்தியா * வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது மோதல்

புதுடில்லி: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், இன்று டில்லியில் துவங்குகிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி எளிதாக வெல்ல காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இரண்டரை நாளில் வென்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் இன்று டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் துவங்குகிறது.
மீள்வாரா சுதர்சன்
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தருகிறது. ராகுலை பொறுத்தவரையில் கடைசி 6 டெஸ்டில், 3 சதம் அடித்து சிறப்பான 'பார்மில்' உள்ளார். ஜெய்ஸ்வால் சிறப்பாக துவக்கினாலும் பெரிய ஸ்கோராக மாற்ற தவறுகிறார்.
மூன்றாவது இடத்தில் களமிறங்கும் சாய் சுதர்சன் தொடர்ந்து தடுமாறுகிறார். இதுவரை 4 டெஸ்டில் 147 ரன் (7 இன்னிங்ஸ்) மட்டும் எடுத்துள்ளார். இம்முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஜுரெல் நம்பிக்கை
இளம் கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்டில் அரைசதம் அடித்து கைகொடுத்தார். பின் வரிசையில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல், ஜடேஜா என இருவரும் கடந்த முறை சதம் விளாசி கைகொடுத்தனர். அடுத்து வரும் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் திறமை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
பவுலிங் பலம்
பவுலிங்கை பொறுத்தவரையில் முகமது சிராஜ், 7 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். பும்ரா (3) தன் பங்கிற்கு கைகொடுக்கிறார். சுழலில் ஜடேஜா (4), குல்தீப் (4), வாஷிங்டன் (2) தங்களது பணியை கச்சிதமாக செய்து முடிக்கின்றனர். இது மீண்டும் தொடர்ந்தால் இந்திய அணி வெற்றி எளிதாகும்.
வெல்ல முடியுமா
வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் அரங்கில் மோசமான நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (44.1, 45.1) மொத்தம் 89.2 ஓவர்கள் தான் பேட்டிங் செய்தனர். அதானஸ், கிரீவ்ஸ், ஜேடன், கேப்டன் ராஸ்டன் சேஸ் பெரியளவு ரன் எடுக்காதது ஏமாற்றம். பவுலிங்கில் வாரிகன் சுழல் எடுபடவில்லை. 'வேகத்தில்' ஜெடியா பிளேட்ஸ் இன்று சேர்க்கப்படலாம்.

ஆடுகளம் எப்படி
டில்லி ஆடுகளம் முதல் இரு நாள் பேட்டர்களுக்கு கைகொடுக்கும். பின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.

மழை வருமா
டில்லியில் இன்று வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை. இது அடுத்த நான்கு நாட்களுக்கும் தொடரும் என்பதால், டெஸ்ட் முழுமையாக நடக்கும்.

யார் ஆதிக்கம்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 101 டெஸ்டில் மோதின. இந்தியா 24, வெஸ்ட் இண்டீஸ் 30ல் வென்றன. 47 போட்டி 'டிரா' ஆனது.

1987க்குப் பின்...
டில்லி மைதானத்தில் 1987க்குப் பின் இந்தியா பங்கேற்ற 24 டெஸ்டில் ஒன்றில் கூட தோற்கவில்லை. 12ல் வென்றது. 12 'டிரா' ஆனது.
* இந்திய அணி சொந்தமண்ணில் கடைசியாக 1994ல் நடந்த மொகாலி டெஸ்டில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. இதன் பின் நடந்த 10 டெஸ்டிலும் இந்திய அணி (8 வெற்றி, 2 'டிரா') தோற்கவில்லை.

காம்பிர் விருந்து
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர், டில்லியை சேர்ந்தவர். இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க டில்லி வந்த இந்திய அணி வீரர்களுக்கு, காம்பிர், தனது வீட்டில் விருந்து கொடுத்தார்.

ரிச்சர்ட்ஸ், ரிச்சர்ட்சன், லாரா...
வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'ஜாம்பவான்' வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ் 73, ரிச்சி ரிச்சர்ட்சன் 63, பிரையன் லாரா 56. டெஸ்ட் அரங்கில் மூவரும் இணைந்து 26,442 ரன் குவித்துள்ளனர்.
டில்லியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை சந்தித்து, ஆலோசனை வழங்கினர். இதனால், டில்லி டெஸ்டில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.

Advertisement