இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி

விசாகப்பட்டனம்: உலக கோப்பை லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. மழையால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஓவர் குறைக்கப்படவில்லை. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ரிச்சா அபாரம்: இந்திய அணிக்கு பிரதிகா (35), ஸ்மிருதி மந்தனா (23) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஹர்லீன் தியோல் (13) நிலைக்கவில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (9), தீப்தி சர்மா (4), அமன்ஜோத் கவுர் (13) நிலைக்கவில்லை. இந்திய அணி 40 ஓவரில் 153/7 என தடுமாறியது. பின் இணைந்த ரிச்சா கோஷ், ஸ்னே ராணா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
துமி சேகுகுனே, நாடின் டி கிளார்க் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ரிச்சா கோஷ், 53 பந்தில் அரைசதம் எட்டினார். எட்டாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது ஸ்னே ராணா (33) அவுட்டானார். அபாரமாக ஆடிய ரிச்சா கோஷ் 94 ரன்னில் (4 சிக்சர், 11 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 49.5 ஓவரில் 251 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
லாரா அரைசதம்: சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்பரிக்க அணிக்கு தஸ்னிம் பிரிட்ஸ் (0), சுனே லஸ் (5) ஏமாற்றினர். மரிஜானே காப் (20), அன்னேகே போஷ் (1), சினாலோ ஜப்தா (14) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 81/5 ரன் எடுத்து திணறியது. பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் (70), டிரையான் (49) ஜோடி நம்பிக்கை தந்தது.
கிராந்தி வீசிய 47வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அரைசதம் கடந்த நாடின் டி கிளார்க், அமன்ஜோத் கவுர் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். தென் ஆப்ரிக்க அணி 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாடின் (84), காகா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
மந்தனா '982'
ஒருநாள் போட்டி அரங்கில், ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த வீராங்கனையானார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா. இந்த ஆண்டு, 17 போட்டியில், 4 சதம், 3 அரைசதம் உட்பட 982 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (970 ரன், 16 போட்டி, 1997) முதலிடத்தில் இருந்தார்.
முதல் விக்கெட் கீப்பர்
உலக கோப்பை அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் வீராங்கனை ஆனார் ரிச்சா (94). அடுத்த இடத்தில் பவுஜையா காளி (88, எதிர்-இங்கிலாந்து, 1982) உள்ளார்.
ரிச்சா கோஷ், தனது 53வது ரன்னை கடந்த போது ஒருநாள் போட்டி அரங்கில் 1000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இவர், 46 போட்டியில், 7 அரைசதம் உட்பட 1041 ரன் குவித்துள்ளார்.
* ஒருநாள் போட்டியில், 1000 ரன்னை குறைந்த பந்தில் (1010) எட்டிய 3வது வீராங்கனையானார் ரிச்சா கோஷ். முதலிரண்டு இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர் (917 பந்து), இங்கிலாந்தின் நாட் சிவர்-புருன்ட் (943) உள்ளனர்.