திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை

22

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


ஐகோர்ட் மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.


இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ' அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்' என்றார்.

இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.


இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement