நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்

4

வாஷிங்டன்: அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் பொருள் ஒன்று மோதியதில் அதில் விரிசல் ஏற்பட்டது. அந்த விமானி காயமடையவே, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது


அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் திடீரென பொருள் ஒன்று மோதியது. இதனால் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதுடன், காக்பிட்டிலும் சேத்தை ஏற்படுத்தியது. விமானிக்கு கையில் காயம் ஏற்பட்டது.


இதனையடுத்து அந்த விமானம் சால்ட் லேக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள் மாற்று விமானம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


விமானத்தின் மீது விண்வெளி குப்பை மோதியிருக்கலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. அதேநேரத்தில் வேறு சிலர், விமானத்தின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். பறவைகள் உள்ளிட்டவையும் மோதியிருக்கக்கூடும் என்ற யூகமும் கிளம்பி உள்ளது.
இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

Advertisement