சாத்விக்-சிராக் 'நம்பர்-3' * பாட்மின்டன் தரவரிசையில்...

புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, ஒரு ஆண்டுக்குப் பின் மீண்டும் 'டாப்-5' பட்டியலில் இடம் பிடித்தது.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில், பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சமீபத்தில் எவ்வித தொடரிலும் கோப்பை வெல்லவில்லை.
எனினும் 2025ல் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது. இரு தொடரில் பைனல், 6 தொடரில் அரையிறுதி வரை சென்றது. இதனால் 80,050 புள்ளியுடன், மூன்று இடம் முன்னேறி, மூன்றாவது இடத்தில் உள்ளது. தவிர, கடந்த 2024 செப்டம்பர் மாதத்துக்குப் பின், முதன் முறையாக 'டாப்-5' இடத்துக்குள் நுழைந்தது.
முதல் இரு இடத்தில் தென் கொரியாவின் கிம் வான் (1,14,805), சியோ சியுங் (92,450), மலேசியாவின் ஆரோன் சியா, சோ ஊய் ஜோடி உள்ளது.
சமீபத்திய ஹாங்காங் ஓபனில் அரையிறுதி, டென்மார்க் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய, இந்தியாவின் லக்சயா சென், ஆண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 5 இடம் முந்தி, 16 வது இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா, தனிஷா ஜோடி 15வது இடத்துக்கு முன்னேறியது. சிந்து (ஒற்றையர்), திரீஷா, காயத்ரி ஜோடி (பெண்கள் இரட்டையர்) 13வது இடத்தில் தொடர்கிறது.

Advertisement