கொச்சி-தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

மூணாறு: கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே கூம்பன்பாறை லட்சம் வீடு காலனி பகுதியில் அக்.25 இரவில் மண்சரிவு ஏற்பட்டது. பிஜூ என்பவர் இறந்தார். அவரது மனைவி சந்தியா பலத்த காயத்துடன் ஆலுவாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு மீண்டும் மண் சரிவுக்கு வாய்ப்புள்ளதால் மூணாறுக்கு போக்குவரத்து தடைபட்டது. அடிமாலியில் இருந்து மூணாறுக்கு கல்லார்குட்டி, வெள்ளத்தூவல் மாற்று வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

இதே சாலையில் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் அக்.27ல் இரவு மண்சரிவு ஏற்பட்டு ரோடு ஆபத்தாக உள்ளது. அதில் வாகனங்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றன.

இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் அறிக்கை: பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் மண் சரிவு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி கனரக சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை ஆனச்சால், பூப்பாறை வழியாக செல்ல வேண்டும். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிறிய ரக வாகனங்கள் ஒரு வழியாக செல்ல வேண்டும். மழை முன் அறிவிப்பை பொறுத்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். இந்த கட்டுப்பாடுகளை இடுக்கி எஸ்.பி, இடுக்கி வட்டார போக்குவரத்து துறை அதிகாரி, தேவிகுளம் தாசில்தார் நடைமுறைபடுத்துவர் என கூறியுள்ளார்.

Advertisement