ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்

சென்னை: 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தி.மு.க., அரசு யாரை காப்பாற்ற துடிக்கிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உண்மையை வெளிக்கொண்டு வர, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளுக்கு, தி.மு.க., அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே, தமிழக காவல்துறை நடத்தும் விசாரணை, சந்தேகத்திற்கு இடமாகவே இருக்கிறது.

உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதற்காகவே, கைதான மூவர், அடுத்தடுத்து 'என்கவுன்ட்டர்' செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த வழக்கில், சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக்கி, விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில், தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சி.பி.ஐ., விசாரணையை தடுக்க, இரண்டாம் முறையாக, தி.மு.க., அரசு மேல்முறையீடு செய்திருப்பது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

யாரை காப்பாற்ற தி.மு.க., துடிக்கிறது என்ற கேள்வி எழுந்து உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை, திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement