மாயனுார் கதவணையில் ஜிலேபி ரக மீன்களுக்கு கிராக்கி


கரூர், மாயனுார் கதவணையில், ஜிலேபி ரக மீன்களுக்கு நேற்று கிராக்கி ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில், கதவணை கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கதவணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால், 25க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் சென்று, மீன்களை பிடித்து விற்பனை செய்தனர்.


கரூர் மாவட்டம் மட்டுமின்றி, திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் மற்றும் நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதிளை சேர்ந்த பொதுமக்கள், கதவணை சாலை மூலம், மாயனுாருக்கு சென்று, நாள்தோறும் மீன்களை வாங்கி செல்கின்றனர். நேற்று பொது மக்கள் கார், டூவீலர்களில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். இதனால், மீன் வகைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.
குறிப்பாக, அதிக சுவை கொண்ட ஜிலேபி ரக மீன்களுக்கு செம கிராக்கி இருந்தது. வழக்கமான நாட்களில் ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற ஜிலேபி ரக மீன் நேற்று, 120 ரூபாய் வரை விற்றது. அதே போல் பாறை, கெளுத்தி, ரோகு, டேம் வஜ்ரம் உள்ளிட்ட, பல்வேறு மீன் வகைகளும் ஒரு கிலோ, 100 முதல், 150 ரூபாய் வரை விற்றது.

Advertisement