சான்பிரான்சிஸ்கோ-டில்லி ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு: மங்கோலியாவில் அவசர தரையிறக்கம்

7

உலான்பாடர் (மங்கோலியா): சான்பிரான்சிஸ்கோவிலில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மங்கோலியாவுக்கு திருப்பி விடப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா விமானம் AI 174 சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் கோல்கட்டா வழியாக டில்லி வந்து சேர வேண்டும்.

ஆனால் நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானிகள் குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் மங்கோலியாவின் உலான்பாடர் நகரத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் மிகுந்த பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது என்றும், எவ்வித நெருக்கடியும் இல்லை என்றும் விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். அவர் மேலும் கூறுகையில், அனைத்து பயணிகளையும் விரைவில் அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எதிர்பாராத சூழலில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு எப்போதுமே ஏர் இந்தியா நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து என்ன விதமான கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய பொறியாளர்கள் குழுவினர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Advertisement