மதுரையில் நவ.10க்குள் சர்வதேச ஹாக்கி அரங்கு நிறைவு பெறுமா எஸ்.டி.ஏ.டி., உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆய்வு

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.,28ல் ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி தொடங்க உள்ளது. அதற்கான அரங்கு அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

ரூ.10.55 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான ஹாக்கி அரங்கு, பார்வையாளர்கள் காலரி அமைக்கும் பணி மே மாதம் தொடங்கியது. அரங்கின் கீழ்த்தளத்தில் வீரர்கள், நடுவர்கள் தங்குவதற்கான அறை, மாடியில் இரு பக்கத்திலும் தலா 150 பேர் அமர்வதற்கும் நடுவில் 20 வி.ஐ.பி.,க்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் முழு 'ஏசி' வசதி செய்யப்பட உள்ளது. போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. கட்டுமான பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

காலரியின் தரைத்தளம், முதல்தளத்தின் தரைப்பகுதி, சுவர்ப்பகுதி பூச்சுவேலை இன்னும் தொடங்கவில்லை. இப்பணிகள் முடிந்தபின்பே 'ஏசி' அமைப்பதற்கான வேலை நடைபெறும். ஒரு பக்க காலரிக்கு மட்டும் ரெடிமேட் இரும்பு படிக்கட்டு பொருத்தப்படுகிறது. அரங்கை ஒட்டிய காலரியின் முகப்பில் அழகுப்படுத்தும் வகையில் இரும்புக்குழாய்கள் இறக்கப்பட்டு அதன் முகப்பில் விளக்குகள் ஒளிர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரங்கிற்கு செல்வதற்கான மைதானத்தின் இருவழிப் பாதையிலும் சேறும் சகதியுமாக ரோடு மேடு பள்ளமாக உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளதால் அரங்குக்கு வரும் அனைத்து பாதைகளையும் சீரமைக்க வேண்டும்.

அரங்கை நேற்று ஆய்வு செய்த உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி 'வி.ஐ.பி.,' அரங்கில் இடம்பெறும் வசதிகளை உறுதி செய்தார். அவர் கூறுகையில் ''நவ.,10க்குள் ஹாக்கி அரங்கு, லைட்டிங் தயாராகி விடும். நவ.,28 தான் போட்டி என்பதால் இன்னும் அவகாசம் இருக்கிறது. இந்திய அணி டிச.,2ல் மதுரையில் விளையாடும்'' என்றார். கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா உடனிருந்தனர்.

@block_B@

ஐந்தடுக்கு அரங்கு

ஹாக்கி அரங்கை சமப்படுத்தி கான்கிரீட் தரை அமைத்து அதற்கு மேல் 'பிட்டுமின்' எனப்படும் தார் ஊற்றப்பட்டு 3வது அடுக்காக 'ஸ்டார்ட் பேட்' எனப்படும் மெத்தை போன்ற ரப்பர்கள் ஒட்டப்பட்டு கடைசியாக 'டர்ப்' ஒட்டப்பட்டு தயாராகி வருகிறது. வீரர்கள் ஓடும் போதும், தாவும் போதும் 'ஸ்டார்ட் பேட்' துகள்கள் மெத்தை போன்று செயல்படும். நிரந்தர காலரியில் 300 பேர் பார்க்கும் வசதி உள்ளது. சர்வதேச போட்டிகள் நவ. 28 முதல் டிச. 12 வரை நடக்கும் போது, கூடுதலாக 1200 பேர் அமரும் வகையில் அரங்கின் இருபக்கத்திலும் தற்காலிக காலரி அமைக்கப்பட உள்ளது.block_B

Advertisement