ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்: கோபாலசாமி

20


புதுடில்லி: ''கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று துவங்க உள்ளது. இதன் முதல் கட்டமாக, வாக்காளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில், ஓட் டுச்சாவடி அலுவலர்கள், இன்று முதல் ஈடுபட உள்ளனர். இதற்காக, வீடு வீடாக வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை அணுகுவது தொடர்பாக, பல்வேறு கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல் நாளான இன்று என்ன நடக்க போகிறது?

கடந்த, 2002ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு வருவர். இதற்கான பட்டியல், தேர்தல் கமிஷன் வாயிலாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொண்டு வரும் படிவத்தில், தொடர்புடைய வாக்காளரின் பெயர், முகவரி விபரம் இடம்பெற்று இருக்கும். அதை வாக்காளர்கள் வாங்கி கொள்ள வேண்டும்.

அந்த வாக்காளர், 2002ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால், மற்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வாக்காளர், தொகுதி அல்லது வீடு மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை, 2002ம் ஆண்டு வேறு ஒரு தொகுதியில், வேறு ஒரு இடத்தில், அந்த வாக்காளர் இருந்தால், அதை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், அந்த தொகுதியில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை பார்த்து, அவரது இருப்பை உறுதி செய்வார். அதன்பின், குடும்பத்தில் உள்ள மற்ற வாக்காளர்களின் விபரத்தை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர் அடுத்தமுறை வரும்போது, மீண்டும் சமர்பிக்க வேண்டும்.


எத்தனை நாட்களில் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற வாய்ப்புள்ளது?


ஒவ்வொரு ஓட்டுச்சா வடிக்கும், 1,200 வாக்காளர்கள் இருக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம் வரையறை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, கிராமங்களில் குறைந்தபட்சம், 250 வீடுகள் வரை இருக்கும். நகரப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தமாக பல வாக்காளர்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.


ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு வாரம் அல்லது, 10 நாட்களுக்குள் கணக்கெடுப்பு விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணிகள் நிறைவு பெறும். அடுத்தகட்ட சுற்றின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை, வாக்காளர்கள் வழங்க வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்வதில், ஏதாவது சந்தேகம் இருந்தால், அதற்கு தேவையான உதவிகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement