கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

12


கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது, "பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும்.

இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க அதிமுக சார்பாக மகளிருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் இன்று 60 வயது பாட்டிக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement