முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வங்கதேசத்தில் நுழைய தடை

4

டாக்கா : சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக். பயங்கரவாதத்தை துாண்டும் விதமாக பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.தற்போது, தெற்காசிய நாடான மலேஷியாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.


இந்த நிலையில், நவம்பர் 28, 29 தேதிகளில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று ஜாகிர் நாயக்கை அழைத்திருந்தது. மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அவர் ஒரு மாதம் வங்கதேசத்தில் தங்கவும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டது.


கடந்த 2016ம் ஆண்டு, டாக்காவில் உள்ள பேக்கரியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டதை அப்போது ஒப்புக்கொண்டிருந்தார். வங்கதேசத்தில், வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது.


ஏற்கனவே, நாட்டில் போராட்டங்கள் வெடித்த நிலையில், சட்டம் -- ஒழுங்கை காரணம் காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜாகிர் நாயக் நுழைய வங்கதேச உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடிந்த பின் அவரது வருகை குறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது.

Advertisement