காசியாபாத்தில் தடை செய்யப்பட்ட 15 லட்சம் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்; 8 பேர் கைது
காசியாபாத்; காசியாபாத்தில், 4 சரக்கு லாரிகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட 15 லட்சம் இருமல் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் போலீசார், டில்லி-மீரட் சாலையில் கூக்னாமோர் என்ற பகுதி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கே உள்ள கிடங்கு ஒன்றில் 4 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதைக் கண்டனர்.
சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக அங்கு சென்று அந்த லாரிகளில் சோதனை நடத்தினர். அப்போது அதனுள் ஏராளமான மருந்து பாட்டில்கள் பெட்டி, பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டனர். தொடர் விசாரணையில் அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கேசவ்குமார் சவுத்ரி கூறியதாவது;
கூக்னாமோர் பகுதி அருகில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினோம். அப்போது லாரிகளில் மருந்து பாட்டில்கள் இருப்பதை கண்டோம். மொத்தம் 15.73,500 மருந்து பாட்டில்கள், 1150 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த மருந்துகள் அனைத்தும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவை. அதன் சந்தை மதிப்பு ரூ. 3.4 கோடி. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் தியாகி(37), சந்தோஷ் பஹாதனா(32) ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.
விசாரணையில், இருவரும், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும், வங்கதேசத்திற்கும் இந்த இருமல் மருந்துகளை விநியோகம் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்ளில் தியாகி என்பவர் காசியாபாத் மருந்தாளுநர்கள் சங்கத்தின் காசாளாராக பணியாற்றுபவர்.
அப்போது மருந்து நிறுவனங்களுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி இதுபோன்ற இருமல் மருந்துகளை வாங்கி உள்ளார். அவர் ஒரு மருந்தகத்தையும் நடத்தி வருகிறார்.
இவ்வாறு கூடுதல் போலீஸ் கமிஷனர் கேசவ்குமார் சவுத்ரி தெரிவித்தார்.
பிடிபட்டவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம், ஒரு சொகுசு கார், இரு லேப்டாப்கள், 7 ரப்பர் ஸ்டாம்புகள், 10 போலி மொபைல் போன் சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.