மெக்சிகோ அதிபரிடம் அத்துமீற முயன்ற போதை நபர் கைது
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் மக்களிடம் கலந்துரையாடிய அதிபரிடம் போதையில் வந்த நபர் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து பெண்கள் மீதான தாக்குதல் அதிபர் கூறியுள்ளார்.
மெக்சிகோ அதிபராக இருப்பவர் கிளாடியா ஷீன்பாம். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நேற்று( நவ.,4) சாலையில் இறங்கி, அங்கிருந்த பொது மக்களிடம் கலந்துரையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த போதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கிளாடியா ஷீன்பாமை பின்புறம் கட்டியணைத்து முத்தமிட முயன்றார். உடனடியாக அதிபர் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார். பாதுகாவலர்கள் அந்த நபரை அகற்றிவிட்டனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இது தொடர்பாக கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது: பெண் என்ற ரீதியில் எனக்கு ஏற்பட்ட அத்துமீறல் தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வேன். இதுபோன்ற அத்துமீறல்களை முன்னரும் சந்தித்துள்ளேன். கபபடிக்கும்போதும் எதிர்கொண்டுள்ளேன். இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த பெண்கள் மீதான தாக்குதல். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து போதையில் அத்துமீறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.