ஓடிடி தொடர் பார்த்து ரூ.150 கோடி கொள்ளையடித்த கும்பல் சிக்கியது
புதுடில்லி: ஓடிடி தளத்தில் வெளியான பிரபல தொடரால் ஈர்க்கப்பட்டு ரூ.150 கோடி கொள்ளையடித்த கும்பலை டில்லி போலீசார் கைது செய்தனர்.
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ' மணி ஹெய்ஸ்ட்' என்ற தொடர் நாடகம் ஒளிபரப்பானது. இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்த இத்தொடருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். பல கொள்ளை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த தொடரால் ஈர்க்கப்பட்டு ரூ.150 கோடியை சுருட்டிய கும்பல் ஒன்றை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அர்ப்ரீத், பிரபாத் மற்றும் அப்பாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில், வழக்கறிஞரான அர்ப்ரீத் என்பவர் பேராசிரியர் போன்று செயல்பட்டுள்ளார். மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் 'அமான்டா' என்ற பெயரில் பிரபாத்தும், ' பிரெட்டி' என்ற பெயரில் அப்பாசும் நடித்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
ஏமாற்றியது எப்படி
இக்கும்பல் முதலில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் பெற்றுத் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். தங்கள் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சிறிய அளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதலில் கூடுதலாக பணத்தை கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அதிகளவு முதலீடு செய்த உடன் அந்தக்கணக்கை முடக்கி உள்ளனர்.
இதனை மீறி பணத்தை எடுக்க முயலும் போது அவர்களை மிரட்டி கூடுதல் பணத்தை டெபாசிட் செய்ய வைத்துள்ளனர். இவ்வாறு, அந்த கும்பல் 300 பேரை ஏமாற்றி மோசடி செய்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதில் கிடைத்த பணத்தை செலவழிக்க ஆடம்பர ஓட்டலில் தங்கியுள்ளனர். இது தொடர்பாக உ.பி.,யின் நொய்டா மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரங்களில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து 11 மொபைல் போன்கள், 17 சிம்கார்டுகள், 12 வங்கி பாஸ்புத்தகங்கள், செக் புத்தகங்கள், 32 டெபிட் கார்டுகள் மற்றும் வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த கும்பல் பலரிடம் மோசடி செய்து ரூ.150 கோடி வரை கொள்ளையடித்துள்ளனர். இந்த மோசடியில் சீன நாட்டவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதனை தவிர்த்து வேறு முறைகளில் மோசடி செய்து இந்த கும்பல் ரூ.23 கோடி ரூபாய் பணம்பறித்துள்ளனர். வெளிநாட்டினர் தொடர்பு குறித்தும், அவர்களின் கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.